Published Date: March 7, 2024
CATEGORY: CONSTITUENCY
மதுரை மாவட்டத்தில் நீங்கள் நலமா திட்டத்தில் அமைச்சர்கள் மக்களிடம் பேச்சு ; பயணிகள் வரவேற்பு.
தமிழக அரசின் நீங்கள் நலமா திட்டத்தில் பொதுமக்களிடம் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போனில் உரையாற்றினர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீங்கள் நலமா திட்டத்தினை சென்னையில் நேற்று தொடங்கி வைத்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் பயனடைந்த பயணிகளிடம் போன் மூலம் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் நேற்று 'நீங்கள் நலமா' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் அமைச்சர்கள் பி. மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் சங்கீதா ஆகியோர் அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் பயனடைந்த பொது மக்களிடம் போன் மூலம் உரையாற்றினர்.
அமைச்சர் பி.மூர்த்தி பத்திரப்பதிவுத்துறையில் மனு அளித்து பயனடைந்த பயனாளிகளிடம் உரையாற்றினார். அப்போது அவர் பத்திரப்பதிவு கட்டணமானது அரசு விதிமுறைகளின்படிமுறையாக வசூலிக்கப்பட்டதா? நீங்கள் அளித்த மனுவினை முறையாக பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என கேட்டு அறிந்தார்.மேலும் வணிகவரி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்ட சமாதான திட்டத்தின் கீழ் பயனடைந்த வணிகர்களிடமும் உரையாற்றினார்.
வணிகவரித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக உங்களை வந்து சேர்கிறதா? இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆனது உங்களுக்கு பயனுள்ள திட்டங்களாக இருக்கிறதா?என கேட்டறிந்தார்.
இதைப்போல் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மூலம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டு பயனடைந்த பயனாளிகளிடம் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என கேட்டறிந்தார்.
கலெக்டர் சங்கீதா, புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பயனடைந்த மாணவிகள், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பயனடைந்த தொழில் முனைவோர்கள், ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் தேய்ப்பு பெட்டி பெற்ற பயனாளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மூன்று சக்கர வாகனம் பெற்ற பயனாளிகள், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் பயனடைந்து வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடமும் தொலைபேசியில் உரையாற்றினார். அப்போது அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்தும், செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் அனைத்தும் முழுமையாக உங்களுக்கு கிடைக்கப்பெறுருகிறதா?என கேட்டறிந்தார்.
பயனாளிகள் கூறும்போது நேரடியாக அமைச்சர்கள், கலெக்டர் என தொலைபேசியில் பேசி விபரம் கேட்டனர். இது அரசின் செயல்பாடுகளின் மீது புத்தம் புதிய நம்பிக்கையை தந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக உரிய பயனாளிகளுக்கு சென்று சேர்வதை இந்த முயற்சி உறுதிப்படுத்துவதுடன் திட்டங்கள் குறித்தும் விரிவான விபரம் தெரிந்து கொள்ளவும் முடிகிறது என்றனர்.
Media: Dinakaran